My relative's article

இன்று என் சித்தியின் பிறந்த நாள்.
தாயின் தங்கை.
என்னை வளர்த்து இன்னிலைக்குயர்த்திய என் இன்னொரு தாய்.
மல்லிகா அவர் இயற்பெயர்.
விவேகானந்தனும் காந்தியும் தன்னைக் கவர்ந்தமையால் இரண்டையும் இணைத்து விவேகா எனத் தன்பெயர் மாற்றிக்கொண்டவர்.
தலைமைச் செயலகத் தோழர்களுக்கு அவர் என்றும் விவேகா. அன்புடன்பிறந்தோர்க்கு அவர் இன்றும் மல்லிகா.
ஒவ்வோராண்டும் புத்தாண்டு பிறப்பதற்காய் டிசம்பர் 31 அன்று இரவு 12 மணிவரை விழித்திருக்கும் உலகம்.
நானும் விழித்திருப்பேன். 12மணி தாண்டியதும் சித்திக்குத் தொலைபேசி பிறந்தநாள் வாழ்த்துசொல்ல.
சித்தியும் விழித்திருப்பார். தன் பிறந்தநாளை உலகமே வாணவேடிக்கைகள் இட்டுக் கொண்டாடுவதைப் பார்ப்பதற்காய். எங்கள் வாழ்த்துக்களைக் கேட்பதற்காய்.
இந்த ஆண்டும் உலகம் விழித்திருந்தது. மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட சித்தி விழித்திருக்கவில்லை.
நான் விழித்திருந்தேன் இனி என் செய்வேன் என.
இன்றென் வாழ்வு சித்தி தந்தது.
மனமிடிந்து போன காலகட்டத்தில் பாரதியின் தேடிச்சோறு நிதந்தின்று பாடலை எனக்கெழுதி வேடிக்கை மனிதனல்லடா நீ என மனந்தேற்றி உருவேற்றியவர்.
கணிதம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என வற்புறுத்திய தந்தையிடம் என் தமிழார்வம் எடுத்துரைத்து நான் தமிழ் படிக்க வாய்ப்பேற்படுத்தித் தந்தவர். படித்து முடியும் வரை தாங்கி நின்றவர்.
சிறுவயதில் சிறுவர் கதைப்புத்தகங்கள் படிக்கக் கற்றுத்தந்தவர். நாளும் ஒரு திருக்குறள் மனனம் செய்யப் பயிற்றுவித்தவர்.
அவ்வகையில் என் தமிழார்வம் இன்றுள நிலைக்கு வித்திட்டவர்.
என்னுயிர்க் காதலி என்னொடு இணைந்திடத் தன் கரம் தந்தவர்.
ஆழ்ந்த இறைபக்தியாளர் எனினும் நானொரு நாத்திகனாய் வளர்ந்தெழ உறுதுணையானவர்.
இன்றிலை அவர்.
இறைநம்பிக்கையாளனாய் இருந்திருந்தால் இறையடி சேர்ந்திருப்பார் என எண்ணி மனமமைவேன். இன்னொரு பிறவி இவர்க்கிலை எனப்பூரித்திருப்பேன்.
இல்லை. என் செய்வேன்?
இதோ அணியமாகிறது என் ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பு நூல்
கருமை
கவரி
காளமேகம்
இந்நூலை அவர் பொன்னடிகளில் படையலிடுவதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் என்னால்.
நீ தந்த தமிழ் கொண்டு
நீ தந்த ஆய்வறிவால்
நான் இவ்வுலகு தரும்
இச்சிறுநூலை நின் தாள்தந்தேன்.
தாயே நீயே துணை.
என்னிறை தேர்ந்தெனக்(கு) இன்தமிழ் தந்தனை
தன்னிறை வாழ்வில் தனிச்சுடர் ஆயினை
மின்னொளிர் மல்லிக தாயே விவேகநின்
பொன்னடி போற்றுமிந் நூல்
வேடிக்கை மனிதனைப்போலே நானும் வீழ்ந்துவிடமாட்டேன்.
Unlike · ·

Comments

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List