அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் இடங்கள் 2 லட்சம்

மக்களை கவருவதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசு, அவற்றை நிறைவேற்றுவதற்கான ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. காலியிடங்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ள நிலையில், இன்னும் ஓராண்டில் மேலும் 50 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற்று வீட்டுக்கு போக உள்ளனர். இவற்றையெல்லாம் தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.


"அரையணா சம்பாதிச்சாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்' என, அரசுத் துறையில் பணியாற்றுவதை பெருமையாக நினைப்பர். ஆரம்ப காலக்கட்டத்தில் 10ம் வகுப்பு முடித்திருந்தாலே அழைத்து வந்து வேலை கொடுப்பர். இப்போது, அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. போட்டித் தேர்வு, லஞ்ச லாவண்யம் அதிகரிப்பால், தனியார் துறையை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. தனியார் நிறுவனங்களில் ஊதியமும் கட்டுக்கடங்காமல் கொடுப்பதால், அரசுப் பணியை ஒதுக்கும் இளைஞர் பட்டாளம் உள்ளது. வருவாய் துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, சுகாதாரம், போலீஸ் துறை, கல்வித் துறை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, வனத்துறை, சமூக நலத்துறை என, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 52 துறைகள் உள்ளன. அதுமட்டுமின்றி உள்பிரிவு, வெளிப்பிரிவு என மேலும் 50 துறைகள் உள்ளன.


ஆபீஸ் அசிஸ்டென்ட் முதல் துறைச் செயலர் வரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசுப் பணியில் இருந்தனர். காலை 10 மணிக்கு வந்து 5 மணிக்கு செல்லும் காலம் மாறிவிட்டது, ஆட்கள் பற்றாக்குறையால் இரவு, பகல், விடுமுறை நாட்கள் பாராமல் வேலை பார்க்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். "ஹாயாக வந்து கையெழுத்து' போட்டு செல்லும் அதிகாரிகள் கூட்டமும் ஓரளவு இருக்கத் தான் செய்கிறது. அதே வேளையில், ஒருவர் நான்கு பேரின் வேலையை சேர்த்து பார்க்க வேண்டும் என்ற மறைமுக உத்தரவால், அரசுத் துறை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவிக்கின்றனர். பலர் வி.ஆர்.எஸ்., வாங்கிக் கொண்டு செல்லும் சூழலும் உள்ளது. அரசு ஊழியர்களோ புதிய திட்டங்களுக்கு தகுந்தாற்போல் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தற்போதைய நிலையில், அரசின் அனைத்து துறையிலும் சேர்த்து இரண்டு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓய்வு பெற்று செல்பவர், பதவி உயர்வு, இறப்பு, டிரான்ஸ்பர் போன்றவை மூலம் காலியான இடங்கள் நான்கு, ஐந்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே கிடக்கின்றன. காலியிடங்களை சுட்டிக்காட்டி மக்கள் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் மெனக்கெடுவதில்லை. வரும் 2012, 2013ல் மட்டும் அனைத்து துறையிலும் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை 50 ஆயிரம் பேர் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளனர். ஏற்கனவே இரண்டு லட்சம் காலியிடம், மேலும் 50 ஆயிரம் காலியானால், அரசின் திட்டப் பணிகள் எப்படி நிறைவேற்றப்படுமோ என்ற அச்சமும் உள்ளது. ஓட்டுகளைப் பெற புதிய திட்டங்களை அறிவிக்கும் அரசு, அதை செயல்படுத்துவதற்குரிய பணியாளர்களை நியமிப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆண்டுக்கு இரு முறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1, குரூப்-2 என அறிவிக்கப்பட்டாலும், தேர்வு மூலம் குறைந்த இடங்களே நிரப்பப்படுகின்றன; மீதமுள்ளவை காலியாகத் தான் கிடக்கின்றன. அடுத்து வரும் ஆட்சி, ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க ஏதாவது அதிரடி நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஊழியர்கள் மத்தியில் உள்ளது.


                                                                                                                          - நமது சிறப்பு நிருபர் -

Comments

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List