tips

வீட்டுக்குள் செருப்புப் போடுங்கள்!
அவள் ஒரு ஆசாரசீலமான வயதான மாது. நடக்கும்போது பாதத்தில் சுரீர் என வலிக்கிறது என்றாள். அவளது பாதத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது, விரலை அண்டிய பகுதிகளில் தோல் தடித்து சொரசொரப்பாகத் திட்டுத்திட்டாக சில ஆணிக் கூடுகள் தெரிந்தன. இவை நீண்ட காலமாகத் தொல்லை கொடுக்கின்றனவாம்.

`வெறும் காலுடன் மண் முற்றத்தில் நடப்பீர்களா?' என்று கேட்டபோது `இல்லை, நாங்கள் இருப்பது பிளட்ஸ் வீடு. காலில் மண் படுவதே கிடையாது. வீட்டிலும் மாபிள் பதித்த தரை. அழுக்கே கிடையாது' என்றாள் பெருமையோடு.

அழுக்கினால் ஆணிக் கூடுகள் வளர்வதில்லை. பாதத்தின் சில பகுதிகள் வெறும் தரையில் தொடர்ந்து அழுத்துவதால் அவை தடிப்படைந்து ஆணிக் கூடுகளாக வளர்கின்றன. இறுக்கமான சப்பாத்து அணிபவர்களின் பெருவிரலின் மொளிப்பகுதியில் தோல் தடித்து கட்டைபோல் இருக்குமே அதைப் போலத்தான் இதுவும். `இவ்வாறு தோல் தடிக்காமல் தடுப்பதற்கு வீட்டிற்குள்ளும் எந்நேரமும் மென்மையான பாதணிகளை அணியுங்கள்' என்றேன்.

`வீட்டிற்குள்ளும் செருப்பா!' அதிர்ந்தாள் அந்த ஆசார மாது.

வீடு புனிதமானதுதான்! ஆயினும் அதைவிட எமது கால் காயப்படாமல் இருப்பது அவசியமல்லவா? எச்சிலும் சலமும் தெளித்துப் புனிதப்பட்ட தெருக்களில், தேய்த்து நடந்த செருப்பை வீட்டுக்குள் அணிய வேண்டியதில்லை. வீட்டுக்குள் உபயோகிப்பதற்கு என தனிச் செருப்பை உபயோகித்தால் வீட்டின் சுகாதாரமும் கெடாது. புனிதமும் காப்பாற்றப்படும் எனத் தெளிவுறுத்திய பின் அரை மனதோடு ஏற்றுக் கொண்டாள்.

மற்றொருவர் நீண்டகால நீரிழிவு நோயாளி. அவரது பாதத்தில் நீண்ட காலமாகப் புண். எத்தனையோ தடவை மருந்து கட்டியும் பிரயோசனம் இல்லை. எவ்வளவோ நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உட்கொண்டும் குணமாகவில்லை. அவரது புண்ணைப் பார்த்தபோது அதுவும் கால் தரையில் அழுத்தும் இடத்தில்தான் இருந்தது. மேலும் பரிசோதித்தபோது அவரது காலில் உணர்வு குறைந்திருப்பது தெரிந்தது. அதாவது நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பாதங்களில் விறைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவுதான் (Diadetic Neuropathy) வலி உணர்வு தெரியாததால் புண்ணை மேலும் அழுத்தி அழுத்தி நடந்ததால் அவரது புண் ஆறவில்லை.
எனவே இவருக்கும் செருப்பு அணியுமாறு ஆலோசனை கூறப்பட்டது. அதுவும் எந்நேரமும் அணியுமாறு கூறப்பட்டது. ஆனால் வழமையான பாதணிகள் அல்ல. அவர் நடக்கும்போது புண் உள்ள பாதப் பகுதி தரையில் அண்டவிடாதபடி பாதணி அணியவேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? புண் உள்ள பகுதிக்குப் பின்புறமாக ஒரு பண்டேஜ் சுருளை விரிக்காமல், உருளைபோல வைத்துக் கட்டினால் அப்பகுதி தரையிலிருந்து சற்று உயர்ந்து நிற்கும். இதனால் புண் அழுத்துப்படாமல் பாதுகாக்கும். விரைவில் குணமாகும்.

இன்னொருவர் காலிலும் புண். பெரிய கட்டுப் போட்டிருந்தார். இவர் எனது நோயாளி அல்ல. ஒருநாள் வீதியில் போகும்போது பார்த்தது. இந்தப் புத்திமானுக்கு நீரிழிவால் புண் வந்து பாதத்தின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது தெரிந்தது. இவர் செருப்பு அணிந்திருந்தார்! ஒரு காலில் மட்டும். அதுவும் நல்ல காலில் மட்டும். புண்பட்ட காலானது தெருவில் உள்ள கல்லு முள்ளுகளையும் அழுக்கையும் அளைந்து கொண்டு இன்னொரு புண்ணை அவாவிக் கொண்டு திரிந்தது.

இவரால் விரல்களிடையே கொழுவும் செருப்பு அணியமுடியாது என்பது புரிந்தது. விரல்கள் இல்லாததாலும் பண்டேஜுடன் கொழுவ முடியாததாலும் வழமையான செருப்புகளை அணிய இவரால் முடியாது. பின் புறமாகப் பட்டி வைத்துக் கட்டும் பாதணிகளே உதவும். இவரும் வீட்டில் பிறிதொரு பாதணி அணிய வேண்டியது அவசியமே.

நீரிழிவு நோயாளிகள், பாதத்தில் புண் உள்ளவர்கள் மாத்திரமின்றி, குதிக்கால் வாதம் (Planter Fascitis) போன்று காலில் வேறு நோய் உள்ளவர்களுக்கும் என வெவ்வேறு வகையான பாதணிகள் இருக்கின்றன. இவை அவர்களது நோய்களை தணிக்க உதவும்.

நன்றி:- தினக்குரல் 07.04.2008
Related Posts Plugin for WordPress, Blogger...

:: Useful web links List