* பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ்கள் தொலைந்து போனால்,மீண்டும் அதைப் பெற நினைப்பவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் செய்து, அதற்கான முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலைப் பெற வேண்டும்.
* காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், அவர்கள் தரும் 'கண்டுபிடிக்க முடியவில்லை' எனும் சான்றிதழைப் பெறுவதோடு, அதைத் தாசில்தாரிடம் சமர்ப்பித்து, அவரிடமும் சான்று பெற வேண்டும்.
* தீ விபத்தில் சான்றிதழ்கள் அழிந்தாலோ...சிதைந்தாலோ...தீயணைப்பு துறையிடம் சான்று பெற்று, அதை உறுதிப்படுத்தும் வகையில் தாசில்தார் அளவிலான வருவாய்த்துறை அலுவலர் தரும் சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
* வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் சான்றிதழ்கள் அழிந்து போனால், 'சான்றிதழ்கள் அழிந்து விட்டன' என்று தாசில்தாரிடம் இருந்து சான்று பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
* அவசரமாக சான்றிதழின் நகல் தேவை என்றால், சி.சி.எம்.(CCM - Certified Copy of Marksheet) என்று சொல்லப்படும், சான்றிடப்பட்ட நகல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படும்.
* சி.சி.எம். எனப்படும் இந்த நகல் சான்றிதழை முதல் தடவை பெற, 305 ரூபாயை எஸ்.பி.ஐ.வங்கி (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அல்லது கருவூலத்தில் செலுத்தி, அங்கு வழங்கப்படும் ரசீதை (Challan) பெற வேண்டும். இரண்டாவது தடவை என்றால் 405 ரூபாய் செலுத்த வேண்டும்.
* பணம் செலுத்தியதற்கான வங்கி / கருவூல ரசீது, காவல்துறை மற்றும் தாசில்தார் தரும் சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, 30 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட, சுயமுகவரியிடப்பட்ட கவருடன் விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பத்தில் நீங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்துப் பெற்று, 'செயலாளர், அரசு தேர்வுத்துறை இயக்குநரகம், சென்னை -6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15 நாட்களுக்குள் உங்களுக்கு நகல் சான்றிதழ் கொடுக்கப்படும்.
* சி.சி.எம்.எனப்படும் நகல் சான்றிதழ் தற்காலிகமானதே. அதை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாது. நிரந்தர வேலைக்கு டூப்ளிகேட் சான்றிதழ் பெற வேண்டும்.
* நிரந்தரமாக டூப்ளிகேட் சான்றிதழ் வேண்டுமென்றால், வங்கி / கருவூலத்தில் ரூ.505 ரூபாய் செலுத்தி, அதற்காக வழங்கப்படும் ரசீதைப் பெற வேண்டும்.
* டூப்ளிகேட் சான்றிதழுக்கான விண்ணப்பத்தில், ஏற்கெனவே படித்த பள்ளியின் தலைமையாசிரியரிடம் கையொப்பம் பெற்று, அதனை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். காவல்துறை மற்றும் தாசில்தாரிடம் பெற்ற சான்றுகளின் நகலையும் இணைக்க வேண்டும்.
* குறிப்பிட்ட நபரின் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்று மாவட்ட கல்வி அதிகாரி கெசட்டில் தகவல் வெளியிடுவார். அதன் நகல், சம்பந்தப்பட்ட நபரின் விண்ணப்பத்தோடு அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
* அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகத்தில் இந்த விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அங்கிருந்து டூப்ளிகேட் சான்றிதழ் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தரப்படும். அதன்பிறகு, நேரில் சென்று சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Comments
Post a Comment
please enter true details, otherwise do not waste your time and our space